அரியலூர் மாவட்டத்தில், மேலும் 7 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் ஒருவர் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 149 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்றனர். அதில் குணம் அடைந்த 144 பேர் ஏற்கனவே
அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 5 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த 15-ந் தேதி நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 18-ந் தேதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டம், ஆங்கியனூரில் 8 வயது சிறுமிக்கும், மேலன்குழியை சேர்ந்த 30 வயதுடைய ஒரு வாலிபருக்கும், உடையார்பாளையத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒரு ஆணிற்கும், செங்குணந்தபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய ஒரு வாலிபருக்கும், எடையக்குறிச்சியை சேர்ந்த 35 வயதுடைய ஒரு ஆணிற்கும், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 2 ஆண்கள் என மொத்தம் 7 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 414 ஆக உயர்ந்துள்ளது. இதில் 389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அரியலூர், திருச்சி, சென்னை, ஜெயங்கொண்டம் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருபவர்கள் முன்னதாகவே தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று, தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் எவரேனும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்ததால் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரம் இயங்கும் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும் தகவல் அளிக்கலாம் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story