ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில், டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி ஆட்டோ மீது மோதியது - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில், டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி ஆட்டோ மீது மோதியது - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2020 12:38 PM IST (Updated: 21 Jun 2020 12:38 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரியால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மேலும் ஆட்டோ மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம், 

சேலத்தில் இருந்து தனியார் பார்சல் சர்வீஸ் லாரியில் மளிகை பொருட்களை ஏற்றி அதன் கொண்டு டிரைவர் காமராஜ்(வயது 50) என்பவர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திற்கு வந்தார். அப்போது பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு, சுமை தூக்கும் தொழிலாளர்களை அழைக்க சென்றுள்ளார். அப்போது லாரி எதிர்பாராத விதமாக திடீரென தானாகவே நகர்ந்து எதிரே நின்ற தனியார் பஸ் மீது மோதியது. பின்னர் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் பாதையில் வேகத்தடையை தாண்டி சென்று கொண்டிருந்தது.

அப்போது டிரைவர் இல்லாமல் வந்த லாரியை பார்த்த பொதுமக்கள், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் லாரியை நிறுத்த பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் லாரி சக்கரத்தில் கற்கள் மற்றும் கட்டைகளை வைத்து தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் பயனில்லாமல் அந்த லாரி எதிரே நின்ற ஆட்டோவில் மோதி விட்டு ஆட்டோவுடன் சேர்த்து அருகில் இருந்த கோவிலின் சுவற்றில் நின்றது.

இதில் லாரி வருவதை அறிந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை எடுக்க முயற்சித்தனர். அப்போது நின்ற ஆட்டோவில் ஒரு ஆட்டோவை மட்டும் நகர்த்தி விட்டனர். மற்றொரு ஆட்டோவை எடுப்பதற்குள் லாரி ஆட்டோவை சேர்த்து நசுக்கி விட்டு கோவிலின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ டிரைவர்கள் உயிர் தப்பினர். மேலும் இடதுபுறம் சற்று லாரி நகர்ந்து பஸ் நிலையத்திற்கு உள்ளே சென்றிருந்தால் பஸ்கள் சேதமடைவதுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகள் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

இருப்பினும் அவ்வாறு லாரி போகாமல் இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மொசை (என்கிற) ஆனந்தன் என்பவரின் ஆட்டோ முழுவதும் நசுங்கி சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவர் காமராஜை பிடித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story