தமிழகத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ் தகவல்


தமிழகத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2020 7:31 AM GMT (Updated: 21 Jun 2020 7:31 AM GMT)

தமிழகத்தில், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். நாகை செல்வராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 331 பேருக்கு ரூ.75 லட்சத்து 90 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், மூர்த்தி, கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட நெல் மூட்டைகள் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஏற்புதடையதல்ல.

கடந்த ஆண்டு 24 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளோம் இந்த சாதனையை நாங்கள் தான் முறியடிப்போம்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகள் முடிவடைந்து விட்டன. அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுகுறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story