காரைக்காலில், பூட்டிய வீட்டில் திருநங்கையுடன், வாலிபர் தற்கொலை - போலீசார் விசாரணை
காரைக்காலில் பூட்டிய வீட்டில் திருநங்கையுடன் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால்,
காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் பிலீப்குமார் (வயது 28). திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவரும் காரைக்கால் காமராஜர் சாலையில் வசித்து வந்த திருநங்கை ஷிவானியும் (31) கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து கடந்த மாதம், நிரவி நடுஓடுதுறை காமராஜர் நகரில் உள்ள ஒரு மாடியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஷிவானி, தனது சக திருநங்கைகளில் ஒருவரான காமராஜர் நகர் கனிஷ்காவிற்கு செல்போனில் பேசி, ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என கூறியுள்ளார்.
உடனே கனிஷ்கா, மற்ற திருநங்கைகளுடன் ஷிவானி வீட்டுக்கு சென்றார். அங்கே வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். உள்ளே ஷிவானி மின்விசிறியிலும், பிலீப்குமார் மற்றொரு ஜன்னல் கம்பியிலும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி வீட்டின் உரிமையாளர் சிவகாமசுந்தரி, நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநங்கை ஷிவானி, காதலன் பிலீப்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story