கடையம் அருகே, அட்டகாசம் செய்து வந்த கரடி வனச்சரக அலுவலகத்தில் வைத்த கூண்டில் சிக்கியது
கடையம் அருகே அட்டகாசம் செய்து வந்த கரடி, வனத்துறை அலுவலகத்தில் வைத்த கூண்டில் சிக்கியது.
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய விளைநிலங்களில் கரடி அடிக்கடி புகுந்து அங்குள்ள பயிர்களையும், பழங்களையும் சேதப்படுத்தி வந்தது. எனவே கரடியை பிடிக்க விவசாயிகளின் கோரிக்கையின்படி வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டு வைத்தனர்.
மேலும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் கடையம் வனச்சரக அலுவலர் நெல்லை நாயகம் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரடி சிக்கியது
ஏற்கனவே முதலியார்பட்டி, பங்களாகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்துச் சென்று வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். ஆனால் அதன்பிறகும் தோட்டங்களில் கரடி அட்டகாசம் தொடர்ந்தது. இந்த நிலையில் பங்களாகுடியிருப்பு வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் நேற்று அதிகாலை கரடி ஒன்று சிக்கியது.
தகவல் அறிந்ததும் ஆம்பூர் கால்நடை மருத்துவர் சிவமுத்து, ஆய்வாளர் அர்னால்டு மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். கூண்டுடன் கரடியை எடுத்துச்சென்று அடர்ந்த வனப்பகுதியில் அந்த கரடியை பாதுகாப்பாக விட்டனர். இது கடையம் பகுதியில் பிடிபட்ட 6-வது கரடியாகும்.
Related Tags :
Next Story