செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 121 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் மேற்கு பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், 26 வயது இளம்பெண், அம்பிகா நகர் பகுதியில் வசிக்கும் 39 வயது ஆண், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த 54 வயது பெண், வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு பகுதி செந்தில் நகர், அண்ணா தெருவை சேர்ந்த 59 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
மண்ணிவாக்கம் இந்திரா நகர் பகுதியில் 25 வயது இளைஞர், மறைமலைநகர் பிள்ளையார் கோவில் தெருவில் 24 வயது இளைஞர், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுவன், 65 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,745 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 79 வயது, 61 வயது மூதாட்டிகள், 74 வயது முதியவர், 49 வயது பெண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் புருஷோத்தமன் நகர் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,159 ஆனது. இவர்களில் 588 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 561 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் பலியானார்கள்.
தி.மு.க. பிரமுகர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க பிரமுகரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு துணைத்தலைவரின் கணவருமான 50 வயது நபர், கடந்த 14ந் தேதி தனது பிறந்தநாளை பல்லவாடா கிராமத்தில் கொண்டாடினார். இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பிறந்த நாள் விழாவில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படாததால் தி.மு.க. பிரமுகர், அவரது நண்பரான பாதிரிவேடு கிராமத்தை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தவிர கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வரும் 50 வயது மதிக்கத்தக்க நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் எல்லாபுரம் ஒன்றியம், கொசவன்பேட்டை ஊராட்சியை சேர்ந்த ராள்ளபாடி கிராமத்தில் உள்ள 47 வயதான முதியோர் இல்ல உரிமையாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,534 ஆனது. இவர்களில் 1,240 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 37 பேர் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story