கோவையில், கொரோனாவுக்கு முதியவர் பலி - சாவு எண்ணிக்கை 3-ஆக உயர்வு
கோவையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை,
கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவரின் சளி, ரத்த மாதிரி எடுத்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அந்த முதியவர் நேற்று முன்தினம் இரவு 10.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் இறந்த முதியவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வராததால் உடலை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. இந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா பதிப்பு இருப்பது உறுதி ஆனது. இதையடுத்து அவரின் உடல் மிகவும் பாதுகாப்பாக ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்டு ஆத்துப்பாலத்தில் எரியூட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. அவர் கடந்த மாதம் 3-ந் தேதி இறந்தார். இதுவே, கோவையில் கொரோனாவுக்கு முதல் பலியாக இருந்தது. கடந்த 14-ந் தேதி சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் கொரோனாவால் இறந்தார். தற்போது இந்த 77 வயது முதியவர் கொரோனா தாக்கி இறந்ததால் கோவையில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story