கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அடித்து இழுத்து செல்லும் வீடியோ வைரலாக பரவுகிறது - திருச்சியில் முகாமிட்டு தனிப்படையினர் விசாரணை


கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அடித்து இழுத்து செல்லும் வீடியோ வைரலாக பரவுகிறது - திருச்சியில் முகாமிட்டு தனிப்படையினர் விசாரணை
x
தினத்தந்தி 22 Jun 2020 4:27 AM IST (Updated: 22 Jun 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அடித்து இழுத்து கடத்தி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக தனிப்படையினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 35). திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவருடைய மகள் தமிழினி பிரபா (25). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து கார்த்திகேயன்-தமிழினி பிரபா ஆகியோர் கடந்த 5-ந் தேதி மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு, பதிவும் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை தமிழினி பிரபாவின் பெற்றோர் ஏற்கவில்லை. ஆனால் கார்த்திகேயனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட பலர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.

இது குறித்து கார்த்திகேயன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். அதில், ஆவண கொலை செய்வதற்காக தனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தமிழினி பிரபாவை கடத்திச்சென்றவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் கார்த்திகேயன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தமிழினி பிரபா நைட்டியுடன் இருப்பதும், அவரை ஒரு கும்பல் அடித்து இழுத்து கடத்திச்செல்வதும், அதை தடுக்க வந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்களை கும்பல், கட்டை மற்றும் கற்களை தூக்கி வீசி விரட்டுவதும் பதிவாகி இருந்தது.

அத்துடன் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே அந்த வீடியோவில் வருவது யார் என்பது குறித்தும், தமிழினி பிரபா கடத்திச்சென்றது குறித்தும் தனிப்படை போலீசார் திருச்சியில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story