தலைநகர் பெங்களூருவில் தலைதூக்கும் கொரோனா: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 3 குழுக்கள் அமைப்பு - கர்நாடக அரசு நடவடிக்கை
கர்நாடக தலைநகரான பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவல் தலை தூக்கி வருகிறது. இந்த பரவலை தடுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 3 குழுக்களை அமைத்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது ஆக்டோபஸ் கால்களை ஊன்றியுள்ளது. இந்த வைரசின் தாக்கம் கர்நாடகத்திலும் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. நேற்று வரை கர்நாடகத்தில் 9 ஆயிரத்து 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 141 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கொண்ட மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 19-ந்தேதி மட்டும் 134 பேரும், நேற்று முன்தினம் 94 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகரில் புதிய உச்சமாக நேற்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூருவில் கொரோனா பாதித்தவர்களின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 65 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சமீப நாட்களாக பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநில தலைநகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆனால் பெங்களூருவில் குறைந்த அளவில் இருந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நகரவாசிகளும், சுகாதாரத்துறையும் அதிர்ச்சி அடைந்து உள்ளது. இதை சமாளிக்க பெங்களூருவில் உள்விளையாட்டு அரங்கங்கள் மற்றும் கனகபுரா ரோட்டில் உள்ள ரவிசங்கர் குருஜி மடத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
வெளியே வர வேண்டாம்
மேலும் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில வருவாய்த் துறை மந்திரி ஆர்.அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே அறிவுரையை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமும், பெங்களூரு மாநகர போலீசும் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 3 குழுக்களை அமைத்து தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
துஷார் கிரிநாத்-சத்தியவதி
அதாவது கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் துஷார் கிரிநாத் தலைமையில் ஒரு குழுவும், கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் சத்தியவதி தலைமையில் ஒரு குழுவும், கர்நாடக மாநில மினரல் கழக நிறுவன இயக்குனர் நவீன்ராஜ், பெங்களூரு போலீஸ் கூடுதல் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் ஆகியோரது தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
துஷார் கிரிநாத் தலைமையிலான குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்படி, கொரோனா பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் இருந்து 6 மணி நேரத்திற்குள், கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கோ அல்லது சுகாதார மையங்களுக்கோ மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா அறிகுறி
கொரோனா கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க ஒரு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியவதி தலைமையிலான குழு, கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் உடல்நிலை குறித்து ஆய்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நவீன்ராஜ், ஹேமந்த் நிம்பால்கர் தலைமையிலான குழு, கே.ஆர்.மார்க்கெட், அரசு வேளாண்மை சந்தை, கலாசிபாளையா மற்றும் பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story