ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 267 பேருக்கு கொரோனா - 3 போலீஸ் நிலையங்கள் மூடல்
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2,333 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
வேலூர்,
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகின்றன. இதற்காக வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், மருத்துவக்குழுவினர் அடங்கிய சிறப்பு குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வரும் நபர்களின் விவரங்கள், முகவரி, செல்போன் எண்கள் ஆகியவை பெறப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு அங்கு வைத்து சளிமாதிரி சேகரிக்கப்பட்டு, அதன் முடிவுகள் வரும்வரை வீடுகளில் தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர். சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்படும் நபர்கள் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களின் சளிமாதிரி பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று வந்தால் அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா அறிகுறி காணப்படும் நபர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை 42 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 554 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு கர்ப்பிணி உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு திரும்பும் நபர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதும், ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், அவர்களுடன் பழகிய நபர்களும் கொரோனாவினால் பாதிக்கப்படுவதும் தான் முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 487 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 403 பேர் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆவர். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட 27 பேரும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இல்லாத 57 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக நேற்று ஒரேநாளில் மட்டும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு சளிமாதிரி சேரிக்கப்பட்டது. அதன்முடிவுகள் நேற்று வெளியானதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் விரிஞ்சிபுரத்தில் பணியாற்றிய 2 பெண் போலீசார், ஒரு ஆண் போலீஸ், ஊர்க்காவல்படையை சேர்ந்த ஒருவர் ஆகிய 4 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருடன் பணியில் இருந்த போலீசார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். வேலூர் தெற்கு, விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 2 போலீஸ் நிலையங்களும் மூடப்பட்டன. போலீஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2 போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றி வரும் போலீசார் அனைவருக்கும் விரைவில் சளிமாதிரி சேகரிக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் மத்திய ஜெயிலில் மருந்தாளுனராக பணியாற்றிய காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த 50 வயது நபருக்கும், பாகாயம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த வடக்கு போலீஸ் நிலைய தலைமை ஏட்டுவின் மனைவி, தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 2 ஊழியர்கள், தாராபடவேடு அரசு நகர்புற நிலையத்தில் பணியாற்றும் நர்சு ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அதேபோல சென்னையில் இருந்து வேலூர் சின்னஅல்லாபுரத்துக்கு வந்த தம்பதியினர், தொரப்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர், கஸ்பா ஆர்.என்.பாளைத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர், குடியாத்தத்தை அடுத்த சென்னராயனபள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3, 9 வயது குழந்தைகள் உள்பட 6 பேருக்கும், உறவினர்கள் 2 பேருக்கும், சுகர்மில் சமாதானபுரத்தில் தாய், மகளுக்கும், சென்னாங்குப்பம் மேல்புதூரில் ஒரு வயது ஆண்குழந்தைக்கும், திருநகர் விரிவாக்கம் வெங்கட்ராமன்நகரை சேர்ந்த 4 பெண்களுக்கும், காந்திநகரில் அண்ணன், தம்பிக்கும், காந்திநகரில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும், தாராபடவேடு பாலாஜிநகரில் சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும், சத்துவாச்சாரி பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் உள்பட மாவட்டம் முழுவதும் 109 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், அவர்களுடன் பழகிய நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சளிமாதிரி சேகரிப்பட்டது. அவர்கள் வசித்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியே செல்ல முடியாதபடி இரும்பு தகடுகள் வைத்து அடைக்கப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 557 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 265 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 292 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 53 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 94 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 55 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் புதிதாக 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில், திருவண்ணாமலை நகராட்சியில் 3 சிறுவர்கள் உள்பட 27 பேர், போளூரில் 9 ஆண்கள், 3 பெண்கள், எஸ்.வி.நகரத்தில் 5 ஆண்கள், ஒரு பெண், வந்தவாசியில் 6 ஆண்கள், ஒரு இளம்பெண், கலசபாக்கத்தில் 3 ஆண்கள், ஒரு இளம்பெண் உள்பட மாவட்டம் முழுவதும் 77 பேர் ஆவர். இதனையடுத்து 77 பேரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வாணாபுரத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தண்டராம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 24 பேரும் ராதாபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தண்டராம்பட்டு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
4 மாவட்டங்களிலும் இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 333 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது 4 மாவட்ட பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story