வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டிய யானைகள் - தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு
தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி யானைகள் ஊருக்குள் புகுந்து கிராம மக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இங்கு 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தேன்கனிக்கோட்டை வனப்பகுதி தமிழகத்தின் மிகப்பெரிய மூங்கில் காடுகளாகவும் அனைவராலும் அறியப்பட்டு வருகிறது. இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றி பொதுமக்களை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. யானை பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 குட்டி யானைகள் உள்பட 4 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி அருகே உள்ள அரசட்டூர் கிராமத்திற்குள் புகுந்தன. இதை பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் யானைகள் ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை விரட்டின. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் வீடியோவாக படம் பிடித்தனர்.
இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து வந்து 4 யானைகளையும் தேன்கனிக்கோட்டை காட்டிற்குள் விரட்டினர்.
பின்னர் அரசட்டூர், நமிலேரி, சித்தலிங்க கொட்டாய், கூச்சுவாடி ஆகிய கிராம மக்கள் ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு எடுப்பதற்காகவோ வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story