தஞ்சை மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - வெளிநாடு, சென்னையில் இருந்து வந்தவர்கள்


தஞ்சை மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - வெளிநாடு, சென்னையில் இருந்து வந்தவர்கள்
x
தினத்தந்தி 22 Jun 2020 12:42 PM IST (Updated: 22 Jun 2020 12:42 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடு, வெளி மாநிலம், சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்குத்தான் கொரோனா தொற்று உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வரை தஞ்சை மாவட்டத்தில் 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் 137 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பினர். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக ஒரே நாளில் 21 மற்றும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இவர்களில் 41 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். 3 பேர் சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்து அங்கிருந்து தஞ்சை வந்த 3 பேருக்கும், டெல்லி, ராஜஸ்தானில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 49 பேரும் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், அம்மன்பேட்டை திருப்பனந்தாள், திருவையாறு, வல்லம், அம்மாப்பேட்டை, பூதலூர், மதுக்கூர், திருவிடைமருதூர், தஞ்சையை அடுத்த மாப்பிள்ளை நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக தஞ்சை மாநகரில் 11 பேரும், பேராவூரணி பகுதியில் 7 பேரும், அம்மாப்பேட்டை பகுதியில் 5 பேரும், பாபநாசம், திருவையாறு பகுதிகளில் தலா 4 பேரும் அடங்குவர்.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 272 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story