நாகை கடைமடை பகுதியை மேட்டூர் அணை நீர் அடைந்தது - விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்


நாகை கடைமடை பகுதியை மேட்டூர் அணை நீர் அடைந்தது - விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்
x
தினத்தந்தி 22 Jun 2020 12:42 PM IST (Updated: 22 Jun 2020 12:42 PM IST)
t-max-icont-min-icon

நாகை கடைமடை பகுதியை நேற்று மேட்டூர் அணை நீர் அடைந்தது. இந்த தண்ணீரில் மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

வேளாங்கண்ணி,

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் அணையில் இருக்கும் நீர் இருப்பை பொருத்தும் அணைக்கான நீர்வரத்து பொருத்தும் ஜூன் மாதம் 12-ந் தேதி அல்லது காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 16-ந் தேதி நாகை, திருவாரூர் மாவட்ட பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பாண்டவையாற்றின் மூலம் நாகை மாவட்டம் கடைமடை பகுதியான கீழையூர் ஒன்றியம் இறையான்குடி தடுப்பணைக்கு நேற்று வந்தடைந்தது. இந்த ஆற்றின் மூலம் இறையான்குடி ,வடக்கு பனையூர், தெற்கு பனையூர், வல்லவன்கோட்டகம், கலத்திடல்கரை, மகிழி உள்ளிட்ட சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இறையான்குடிக்கு வந்த தண்ணீரில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் மலர், விதைநெல்லை தூவியும் வரவேற்றனர். இதில் ஊராட்சி தலைவர் சேகர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story