மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த வரப்பு பயிராக நாற்றுச்சோளம் பயிரிடலாம் - வேளாண்மை அதிகாரி தகவல்
மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த வரப்பு பயிராக நாற்றுச்சோளம் பயிரிடலாம் என்று தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி வட்டாரம் மக்காச்சோளம் பயிர் சாகுபடி பரப்பில் மாநில அளவில் 2-வது இடத்தை வகிக்கிறது. 90 சதவீதம் பரப்பில் மானாவாரி முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் மிக எளிதான முறையில், மிகக்குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக வருமானத்தை ஈட்டும் பயிராக மக்காச்சோளம் திகழ்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு படைப்புழு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு 55 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், 2019-ம் ஆண்டு 34 ஆயிரம் எக்டேராக குறைந்தது.
கடந்த ஆண்டும் வேளாண்மை துறையின் சீரிய முயற்சி மூலம் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு, படைப்புழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, விவசாயிகள் நல்ல மகசூல் பெற முடிந்தது.
வரப்பு பயிர்
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையானது கோடை உழவு, வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதைநேர்த்தி செய்தல், பயிர் இடைவெளி பராமரிப்பு, வரப்பு பயிர் சாகுபடி, இனக்கவர்ச்சி பொறி வைத்தல், ரசாயன மருந்து தெளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த முறைகளில் வரப்பு பயிர் சாகுபடி முறை மூலம் 82 சதவீதம் புழு தாக்குதல் குறைந்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வரப்பு பயிராக நாற்றுச்சோளம் பயிரிடுவது தூத்துக்குடி மாவட்டத்துக்கு உகந்ததாக உள்ளது. வயலில் நான்கு சுற்றுக்கும், 4-5 வரிசை நாற்றுச் சோளம் வரப்பு பயிர் அவசியம் விதைக்க வேண்டும். கடைசி உழவில் வரப்பு பயிர் விதைப்பு செய்து விட்டால், மக்காச்சோளம் விதைத்து முளைத்து வருவதற்குள், முட்டையிட வரும் படைப்புழு வரப்பு பயிரிலேயே முட்டைகளை இட்டு விடும்.
நாற்று சோளத்தில் இருந்து வெளிப்படும் வாசனையை படைப்புழு மிகவும் விரும்புவதால், மக்காச்சோள பயிரை படைப்புழு தாக்காது. மக்காச்சோள பயிருக்கு அரண் போன்ற பாதுகாப்பை வரப்பு பயிர் கொடுக்கிறது.
கட்டுப்படுத்த...
நடப்பாண்டு முதல் பருவத்தில், கயத்தாறு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் பயிரில் நாற்றுச்சோளம் வரப்பு பயிராக சாகுபடி செய்யப்பட்டு, படைப்புழுவை முழுமையாக கட்டுப்பத்தி உள்ளனர். தற்போது கதிர் வரும் பருவம் நிலையில் பயிர் உள்ளது. ரசாயன மருந்து எதுவும் இதுவரை தெளிக்கவில்லை.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் பருவத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்யும்போது, கண்டிப்பாக வரப்பு பயிராக நாற்றுச்சோளம் சாகுபடி செய்து படைப்புழுவை 100 சதவீதம் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story