நெல்லையில் பரபரப்பு: கொரோனாவுக்கு பலியானவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நெல்லையில் கொரோனாவுக்கு பலியானவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கோடீசுவரன் நகரை சேர்ந்த 61 வயதுடைய தொழில் அதிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை பாதுகாப்புடன் அடக்கம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதற்காக கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் குழி தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போராட்டம்
பொக்லைன் எந்திரத்தை கொண்டு சென்று பள்ளம் தோண்ட முயற்சித்தனர். இதனை அறிந்த கருப்பந்துறை பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை தாசில்தார் பகவதி பெருமாள், பாளையங்கோட்டை தாசில்தார் தாஸ்பிரியன், சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் கருப்பந்துறைக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு கொரோனாவால் இறந்தவர் உடலை புதைக்கும் முயற்சியை கைவிடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தகனம்
இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள், வேறு இடத்தை தேடி அலைந்தனர். சிந்துபூந்துறை, மணிமூர்த்தீசுவரன் சுடுகாடு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய பார்வையிட்டனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இறந்தவர் உடலை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. சிந்துபூந்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மாநகராட்சி மின்தகன மையத்துக்கு கொரோனாவால் இறந்தவர் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு உரிய நடைமுறைகளின்படி உடல் தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story