மாந்தோப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் அசைவ விருந்து வைத்து கூட்டத்தோடு தனது பிறந்தநாளை கொண்டாடியதால் கொரோனா பாதிப்புக்குள்ளான தி.மு.க.பிரமுகர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர் (வயது 50). தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர். இவர் கடந்த 14-ந்தேதி தனது பிறந்த நாள் விழாவை மாந்தோப்பு ஒன்றில் கொண்டாடினார்.
இந்த விழாவில் சென்னையில் இருந்து அவரது நண்பர்களும், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சில ஒன்றிய கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாகவும், விழாவில் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க. பிரமுகரான குணசேகர் மற்றும் அவரது நண்பரான பாதிரிவேடு கிராமத்தை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் ஆகியோருக்கு கடந்த 21ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4 பிரிவுகளில் வழக்கு
இதனால் அவரது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட பலரும் தற்போது பெரும் கலக்கத்தில் உள்ளனர். விழாவில் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயாரித்து வருகின்றனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரியான 50 வயது நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களும் தற்போது பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில், கொண்டாட்டத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கு காரணமான தி.மு.க. பிரமுகர் குணசேகர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதாவது, அவர் மீது மனித உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் தொற்று நோயை பரப்பக்கூடிய செயலை செய்தல், அரசாங்க தடை உத்தரவை மீறி நடந்த குற்றம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story