விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பா.ஜனதா போராட்டம்


விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2020 11:32 PM GMT (Updated: 22 Jun 2020 11:32 PM GMT)

விவசாயிகளுக்கு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.

மும்பை,

மராட்டியத்தில் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யவும், புதிய பயிர் கடன் வழங்கவும் வலியுறுத்தி நேற்று பா.ஜனதாவினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலாப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைக்காலம் தொடங்கிவிட்டது. விதைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இன்னும் பயிர்கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. மாநில அரசு ஹெட்டேருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படும் என கூறியது. ஆனால் எதுவும் கொடுக்கவில்லை. அதைமூடி மறைக்க ரூ.18 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி அறிவித்தார்கள்.

70 சதவீத விவசாயிகள்

கொரோனா பிரச்சினை தொடங்கிய நேரத்தில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 70 சதவீத விவசாயிகளுக்கு இன்னும் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மேலும் வங்கிகள் புதிய பயிர் கடன்களையும் வழங்காமல் உள்ளன. ஒரு புறம் விவசாயிகளுக்கு புதிய பயிர்கடன் வழங்கப்படுவதில்லை. மறுபுறம் அவர்களின் விளை பொருட்களையும் அரசு கொள்முதல் செய்யாமல் உள்ளது. ரூ.1.65 லட்சம் கோடி கடன் வழங்க மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நல்ல முடிவை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story