கொரோனா பரவல்அதிகரிப்பு எதிரொலி: ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 வார்டுகளுக்கு ‘சீல்’ வைக்கவும் நடிவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 196 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநில தலைநகரான பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கண்டு கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை செயலாளர் வந்திதா சர்மா, சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பெங்களூருவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றும், அதற்காக ஊரடங்கு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை ‘சீல்’ வைத்து முழு ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-
“பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பெங்களூரு வி.வி.புரம், வித்யாரண்யபுரா, கலாசிபாளையா, கே.ஆர்.மார்க்கெட், சித்தாபுரா ஆகிய வார்டுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த வார்டுகளில் கொரோனா நோயாளிகள் உள்ள பகுதிகளை முற்றிலுமாக மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். பக்கத்து தெருக்களையும் முடக்க வேண்டும். சீல் வைக்கப்படும் பகுதிகளில் எல்லைகளை வரையறுக்க வேண்டும். பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளில் பாதிப்பு இருந்தாலும் இதே போல் அந்த பகுதிகளை ‘சீல்’ வைக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அளிக்க வேண்டிய கட்டணம் குறித்து அதிகாரிகள் விரைவாக முடிவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதாரநடவடிக்கைகள்
பெங்களூருவில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. அந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், கொரோனா தடுப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
கூட்டத்திற்கு பிறகு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்எச்சரிக்கை
பெங்களூருவில் கொரோனாவை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் சிக்பேட்டை, கலாசிபாளையா, கே.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளவர்கள், செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு, சாலைகளில் நடமாடுகிறார்கள்.
தனியார்மருத்துவமனைகள்
அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம். கொரோனா ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் பற்றாக்குறையாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதனால் இன்று (நேற்று) முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பிரிவுகளை தொடங்க உத்தரவிட்டுள்ளோம். அதற்கான கட்டணம் குறித்த உத்தரவையும் பிறப்பிக்க இருக்கிறோம்.
கொரோனா அறிகுறி இருப்பவர்களை சமூக நலத்துறை பள்ளி, விடுதிகளில் தனிமைப்படுத்துகிறோம். அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளோம். பெங்களூருவில் கொரோனாவை தடுக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வார்டு அளவில் அதிகாரிகள் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா போர் அலுவலகத்தில், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் உள்ளன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
5 வார்டுகளுக்கு ‘சீல்’
கொரோனா பாதிப்பு பகுதிகளில் அந்த சாலையையே மூட முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் 5 வார்டுகளில் அதிக பாதிப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த பகுதிகளை ‘சீல்’ வைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளோம். சித்தாபுரா, விஸ்வேசவரபுரம், வித்யாரண்யபுரா, எலகங்கா, தர்மராயசாமிநகர் ஆகிய வார்டுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வார்டுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு பாதித்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சமுதாய பரவலை தடுக்கவே இத்தகைய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாட்டுக்கே பெங்களூரு முன்மாதிரியாக இருக்கிறது. இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளோம். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
உடல் பரிசோதனை
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் மையங்களை திறக்க முடிவு செய்துள்ளோம். காய்ச்சல், சளி இருப்பவர்கள் முதலில் அந்த மையங்களுக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கலபுரகி, யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கும் இதே முடிவுகளை அமல்படுத்துவோம்.
இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
Related Tags :
Next Story