கடத்தூர் அருகே, நிலத்தகராறில் பொக்லைன் டிரைவர் அடித்துக்கொலை விவசாயி கைது


கடத்தூர் அருகே, நிலத்தகராறில் பொக்லைன் டிரைவர் அடித்துக்கொலை விவசாயி கைது
x
தினத்தந்தி 23 Jun 2020 8:52 AM IST (Updated: 23 Jun 2020 8:52 AM IST)
t-max-icont-min-icon

கடத்தூர் அருகே நிலத்தகராறில் பொக்லைன் டிரைவரை கட்டையால் அடித்துக்கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கோவில் வனம் பகுதியை சேர்ந்தவர் சீனு. இவருடைய மகன் சங்கர் (வயது 26). விவசாயியான இவர் பொக்லைன் டிரைவராகவும் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது உறவினரான அதேபகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (50). விவசாயிகளான இவர்களுக்கு இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது பரமசிவம், சங்கரை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு கடத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சங்கர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

விவசாயி கைது

இதையடுத்து அவருடைய உறவினர்கள், சங்கரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு கொண்டு செல்வதாக கூறி விட்டு வீட்டுக்கு எடுத்து சென்று போலீசாருக்கு தெரியாமல் உடலை எரிக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் சம்பவம் குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொக்லைன் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story