குளம் தூர்வார பூமி பூஜைக்கு எதிர்ப்பு அமைச்சர் கந்தசாமி முன்னிலையில் இருதரப்பினர் கைகலப்பு


குளம் தூர்வார பூமி பூஜைக்கு எதிர்ப்பு அமைச்சர் கந்தசாமி முன்னிலையில் இருதரப்பினர் கைகலப்பு
x
தினத்தந்தி 23 Jun 2020 4:15 AM GMT (Updated: 23 Jun 2020 4:15 AM GMT)

குளம் தூர்வார பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் கந்தசாமி முன்னிலையில் இருதரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை கிராமத்தில் உள்ள குளம் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தூர்வாரப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில், அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டார்.

அப்போது, அங்கு வந்த சிலர், குளத்தின் அருகே உள்ள இடம் தனிநபருக்கு சொந்தமானது. சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்காமல் எப்படி இங்கு பூஜை போடலாம் என்று கேட்டு அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தனர். இதைப்பார்த்ததும் அங்கு வந்து இருந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் முன்னிலையில் கைகலப்பு

இதனால் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி முன்னிலையிலேயே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளி, கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர்.

இதையடுத்து, அமைச்சர் கந்தசாமி, தூர்வாரப்பட உள்ள குளத்தை அளந்து, அதன் எல்லைகளை காண்பிக்குமாறு தாசில்தார் குமரன், பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பின் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், குளம் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. அமைச்சர் முன்னிலையில் இருதரப்பினர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story