தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது முழுஊரடங்கு தேவை இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது முழுஊரடங்கு தேவை இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2020 11:45 PM GMT (Updated: 23 Jun 2020 6:29 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது முழு ஊரடங்கு தேவை இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் நேற்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்துக்கு இலங்கை, மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் இதுவரை சுமார் 1,400 பேர் வந்து உள்ளனர். அனைவருக்கும் முறையான பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது மாலத்தீவில் இருந்து 198 பேர் வந்து உள்ளனர். அவர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கப்பலில் வந்த பயணிகள் சொந்த மாவட்டத்துக்கு சென்றதுடன் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டு முதல் கட்டமாக கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னர் 7 நாட்களுக்கு பிறகு மறுபடியும் அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். இதில் தொற்று இல்லாத நபர்களை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்து தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று உள்ள நபர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.

ஈரானில் இருந்து...

வருகிற 28-ந் தேதி ஈரான் நாட்டில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கடலோர மாவட்டத்தை சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் சுமார் 650 பேர் முதல் 700 பேர் வரை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக தொற்று உள்ள நபர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு 100 சதவீதம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

தேவை இல்லை

கொரோனா தொற்று உள்ளவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு வருவதால் சமூக பரவல் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்துக்கு முழுஊரடங்கு உத்தரவு தற்போது தேவை இல்லை. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story