போதிய பயணிகள் இல்லாததால் டெல்லி, ஐதராபாத், கொச்சி செல்லும் 10 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் டெல்லி, ஐதராபாத், கொச்சி செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளுக்கு இபாஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் முன்பதிவுகளை ரத்து செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை அமுலில் உள்ளது. மதுரை உள்பட பல மாவட்டங்களில் நாளை முதல் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான உள்நாட்டு முனையத்தில் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் விமான பயணிகளுக்கு இபாஸ் கிடைப்பதில் உள்ள சிரமம் காரணமாக பலர் விமானங்களில் செய்த முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டனர். சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.
சென்னையில் இருந்து மதுரைக்கு 3 விமானங்கள், திருச்சி, தூத்துக்குடிக்கு தலா 2 விமானங்கள் மற்றும் டெல்லி, கொல்கத்தா, அந்தமான், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள் உள்பட 29 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
10 விமானங்கள் ரத்து
இந்த நிலையில், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் கொச்சி, மைசூர், கடப்பா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வர வேண்டிய 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தினந்தோறும் காலை டெல்லிக்கும், ஐதராபாத்தும் செல்ல வேண்டிய 2 விமானங்களும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே நிலை நீடித்தால் சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சில விமானங்களும் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story