மாமல்லபுரத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மதுக்கடைகள்


மாமல்லபுரத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மதுக்கடைகள்
x
தினத்தந்தி 23 Jun 2020 10:30 PM GMT (Updated: 23 Jun 2020 9:15 PM GMT)

மாமல்லபுரத்தில் முழு ஊரடங்கால் மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மாமல்லபுரம்,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் கடந்த 19ந் தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரம் பகுதியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாத காரணத்தால் அங்குள்ள ஒரு வெளிநாட்டு மதுக்கடை உள்ளிட்ட 4 மதுக்கடைகள் மூடப்பட வில்லை.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 19-ந்தேதிக்கு முன்னரே மதுப்பிரியர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து மாமல்லபுரத்துக்கு திரண்டு வந்து பெட்டி, பெட்டியாக பல்வேறு மதுவகைகளை வாங்கி சென்று இருப்பு வைத்து கொண்டனர். அதேபோல் சென்னையை சேர்ந்த மது பிரியர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கார்களில் வந்து இங்குள்ள வெளிநாட்டு மதுபான கடையில் விலை உயர்ந்த வெளிநாட்டு, உள்நாட்டு மதுவகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றதை காண முடிந்தது.

வாகன போக்குவரத்து முடக்கம்

கடந்த 19-ந்தேதி முதல் பழைய மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. அதேபோல் கடைக்கு சென்று மது வாங்கி வரும்போது போலீசாரிடம் சிக்கி கொண்டால் வாகனத்துடன், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் மதுப் பிரியர்கள் பலரும் மதுக்கடைக்கு செல்லாமல் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனால் யாரும் மது வாங்க வராததால் மதுக்கடைகளில் கொள்முதல் செய்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள பீர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட பல்வேறு வகை மதுபானங்கள் விற்பனையாகாமல் பெட்டி, பெட்டியாக தேங்கி கிடக்கின்றன.

தற்போது அங்குள்ள மதுக்கடைகளில் விற்பனையாளர்கள் மட்டுமே தனியாக அமர்ந்து உள்ளதை காண முடிந்தது. மது பிரியர்கள் கூட்டம் இல்லாததால் மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருவிழா கூட்டம் போல்...

மதுப் பிரியர்கள் கூட்டம் இல்லாதால் அங்குள்ள மதுக்கடைகளில் போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டு மாமல்லபுரத்தில் பல்லவன் சிலை பூஞ்சேரி, பேரூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்குள்ள வெளிநாட்டு மதுக்கடையில் நாள் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த வாரம் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் திருவிழா கூட்டம் போல் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் சாரை, சாரையாக திரண்டு வந்ததால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசலும் அதிகமாக இருந்தது. தற்போது மாமல்லபுரத்தில் அனைத்து மதுக்கடைகளும் மதுபிரியர்களின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story