நிதி நிறுவன மேலாளரை தாக்கியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு


நிதி நிறுவன மேலாளரை தாக்கியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Jun 2020 3:45 AM IST (Updated: 24 Jun 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நிதி நிறுவன மேலாளரை தாக்கியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடைய 2 மகன்கள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சங்கரபாண்டியன் மகன் சுந்தரபாண்டியன் என்பவர் கடன் பெற்று மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். இதற்கான மாத தவணை தொகையை அவர் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சங்கர், அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பாக அவர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவித்து விட்டு சமாதானபுரம் பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு சுந்தரபாண்டியனின் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட சங்கர் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றார். இதைக்கண்ட சுந்தரபாண்டியன், இவருடைய தந்தை சங்கரபாண்டியன், சகோதரர் மகேஷ் பாண்டியன் மற்றும் 4 பேர் சேர்ந்து சங்கரை மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

7 பேர் மீது வழக்கு

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பலத்த காயம் அடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் சங்கரபாண்டியன், அவருடைய 2 மகன்கள் உள்பட7 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சங்கரபாண்டியன் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். சுந்தரபாண்டியன் நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story