கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - 81 கடைகள் எரிந்து நாசம்
கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 81 கடைகள் எரிந்து நாசமானது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது. இதில் காய்கறி மண்டிகள் அருகே சிறிய ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், சுழற்சி முறையில் கடைகள் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில், அங்குள்ள ஒரு ஓட்டலில் பயங்கர சத்தம் கேட்டது. தொடர்ந்து கடையில் தீப்பிடித்து எரிந்தது. நேரம் செல்ல செல்ல தீ மள மளவென கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அருகில் இருந்த பிற கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லாரியில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து கூடுதலாக நகராட்சி லாரிகள் மற்றும் தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஓட்டல்களில் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்து, ஈர சாக்குகளை போட்டு மூடினர். சுமார் 3 மணி நேரம் போராடி நேற்று அதிகாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால், தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த பயங்கர தீ விபத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல்கள் என 81 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த காய்கறிகள், மளிகை பொருட்கள் கருகிய நிலையில் சேதமாகி கிடந்தன. இதை பார்த்து வியாபாரிகள் கண்ணீர் விட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இந்த தீ விபத்து சம்பவம் நடந்தது வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். முன்னதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தீ விபத்து ஏற்பட்ட மார்க்கெட்டுக்கு வந்து பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உடனிருந்தார்.
இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் சரஸ்வதி வந்து, தீயில் எரிந்து நாசமான கடைகளை பார்வையிட்டார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் சாந்தி ராமு, கணேஷ், முன்னாள் எம்.பி. அர்ஜூணன் மற்றும் அரசியல் கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர் பார்வையிட்டனர். நகராட்சி ஊழியர்கள் தீயில் கருகிய பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நுழைவுவாயில்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். வியாபாரிகள், அதிகாரிகளை தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மார்க்கெட்டை சுற்றி உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்வதை தடுக்க போலீசார் சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்காக நேற்று மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் மூட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சம்பவம் குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தீ விபத்தில் சேதம் அடைந்த கடைகளுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று நீலகிரி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புத்திச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story