ஆசிரியைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக புகார்: ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர் தர்ணா போராட்டம் - தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு
தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பெண் ஆசிரியைகளுக்கு தொந்தரவு கொடுத்த ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் பெண் ஆசிரியைகளை அதே பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் ஒழுங்கீனமாக செயல்பட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை கடந்த மார்ச் 24-ந்தேதி தேதி தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கால் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் கிடந்தது.
தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் 10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் தெரிவித்த ஆசிரியையை மீண்டும் தொந்தரவு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியை புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திராவிற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அங்கமுத்து தலைமையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியில் நடைபெறும் பெண் ஆசிரியர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் கூறினார்.
அப்போது பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அங்கமுத்து ஊராட்சி தலைவர் பள்ளி நிர்வாகத்தில் தலையிட உரிமையில்லை என கூறி வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆசிரியைகள், மாணவிகளுக்கு தொல்லை கொடுக் கும் ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி நேற்று மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து ஆசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக பள்ளி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story