தேனி மாவட்டத்தில், 10 போலீசார் உள்பட மேலும் 73 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்வு


தேனி மாவட்டத்தில், 10 போலீசார் உள்பட மேலும் 73 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 Jun 2020 3:45 AM IST (Updated: 24 Jun 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 10 போலீசார் உள்பட ஒரேநாளில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தேனி,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 5, 10 பேர் என பாதிப்பு இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக 20, 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 10 டாக்டர்கள் உள்பட 285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

அதில், போடி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 10 போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போடி டவுன் போலீசாரால் ஒரு கடத்தல் வழக்கில் தேனியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, உத்தமபாளையம் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதையடுத்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு, 8 போலீசார் என 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதவிர போடியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் நபர் ஒருவர், போடி நகராட்சி ஊழியர், அரசு மருத்துவமனை ஊழியர் உள்பட 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பெண் உள்பட 3 பேரும், ஆண்டிப்பட்டி அருகே காமன்கல்லூர், குமாரபுரம், சக்கம்பட்டியில் தலா ஒருவரும், கோடாங்கிபட்டியில் 2 பேரும், உத்தமபாளையம், வடபுதுப்பட்டி, அன்னஞ்சி ஆகிய இடங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியகுளத்தில் நகராட்சி அலுவலக ஊழியர்கள் 2 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் 2 பேருக்கும், மதுரையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்னமனூரில் பேக்கரி தொழிலாளி, ஆட்டுத்தோல் வியாபாரி, ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட 6 பேரும், ஓடைப்பட்டியில் 2 பெண்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். டொம்புச்சேரியில் 2 பேரும், காமயகவுண்டன்பட்டி, டி.லட்சுமிநாயக்கன்பட்டி, ராயப்பன்பட்டி, கண்டமனூர் அருகே எரதிமக்காள்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒருவரும், கம்பத்தில் 6 பெண்கள் உள்பட 12 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 73 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, போடி, கம்பம், பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் கர்ப்பிணிகள். இவர்கள் கோடாங்கிபட்டி, சின்னமனூர், எரதிமக்காள்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்தது.

Next Story