திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், 3 நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்


திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், 3 நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2020 3:30 AM IST (Updated: 24 Jun 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வாணியம்பாடி பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

வாணியம்பாடி,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், அதில் இருந்து மக்களை காப்பாற்றவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், சமீப காலமாக கொரோனா தொற்று தாக்கம் குறைவாக இருந்தது. தற்போது சென்னை கோயம்பேடு பகுதியில் தொடங்கி அனைத்துப் பகுதிகளிலும் பரவி உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முதல்-அமைச்சரின் அனைத்து அறிவுரைகளை ஏற்று 3 கலெக்டர்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை ஏற்று பின்பற்றினால் கூடிய விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும்.

ரத்தப் பரிசோதனை செய்வது தமிழகம் முழுவதும் 70 இடங்களுக்கு மேலாக முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார். தற்போது திருப்பத்தூரில் ரத்தப் பரிசோதனை மையம் தொடங்கி 3 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்தப் பரிசோதனை செய்யவில்லை என்றால் 70 இடங்களில் ரத்தப்பரிசோதனை மையங்களை முதல்-அமைச்சர் எப்படி உருவாக்கி இருக்க முடியும். ஏதேனும் எதிர்மறை கருத்துகளை சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எதிர்க்கட்சியினர் முதல்-அமைச்சர் மீது குற்றம், குறைகளை சொல்கிறார்கள். அரசு உத்தரவின்படி மாவட்ட கலெக்டர்கள், மக்களை காப்பாற்ற கவனமுடன் செயல்படுகிறார்கள். கொரோனா தொற்றை மாவட்டத்தில் இருந்து அகற்ற அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எந்தெந்த மாவட்டங்களில் என்ன கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமோ விதித்து கொள்ளலாம். கடைகள் திறப்பது, மார்க்கெட்டுகளை மாற்றியமைப்பது, போக்குவரத்து மாற்றி அமைப்பது, சூழ்நிலைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டு கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற ஒருங்கிணைத்த வேலூர் மாவட்ட கலெக்டர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது தொழிலாளர் நலத்துத்துறை அமைச்சர் நிலோபர்கபில், கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், உள்பட பலர் உடனிந்தனர்.

Next Story