கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் - அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று முன்தினம் கவர்னர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அறிவார்ந்த செயல்பாடுகளுடன் கொரோனா பாதிப்புகளை குறைப்பதற்கு நிர்வாகத்துக்கு தற்போதைய தேவை ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் கூடிய பங்களிப்பு மற்றும் தொற்று குறைவதற்காக செய்யப்படும் செயல்பாடுகள் போன்றவை ஆகும். அனைவரும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுடன் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதும், பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பாற்றுவதையும் நம்முடைய குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதை பற்றியும், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது பற்றியும், பாதுகாப்பு முறைகள் பற்றி தெரிவித்து அதற்கு மக்கள் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது பற்றியும், நிர்வாக செயல்பாடுகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது பற்றியும் கவர்னர் மாளிகையில் ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறோம்.
கவர்னர் அலுவலகம் ஒரு சாதாரண பார்வையாளராக மட்டும் இருக்காது. யூனியன் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு கவர்னர் அலுவலகம் ஒரு நிலையான பங்களிப்பாளர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அந்த பங்களிப்பு மற்றும் சேவை நோக்கத்திற்காகத்தான் கவர்னர் அலுவலகம் உள்ளது.
எந்த ஒரு பங்களிப்பையும் கொடுக்காமல் இருப்பது எளிதான வேலை தான். இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஒரு கால சூழ்நிலை ஆகும். இந்த காலகட்டத்தில் பதில்களை வலுப்படுத்தாமல் சுருக்கமாக சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாகும். நாங்கள் உங்களுடைய (அமைச்சர்களுடைய) நிர்வாகம் சார்ந்து போட்டியிடவில்லை. மாறாக, உங்களுடைய ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பொதுவான நோக்கத்துக்காக உழைக்கிறோம்.
புதுச்சேரி மக்களின் நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு இன்றியமையாதது ஆகும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் கவர்னர் அலுவலகம் வரவேற்கிறது. எங்களுடைய நோக்கங்களை சந்தேகிக்க தேவை இல்லை. ஒவ்வொருவருடைய மதிப்புமிக்க பங்களிப்பை கவர்னர் மாளிகை மதிக்கிறது என்பதை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும். கொரோனா மனிதர்களுடைய எதிரி. இதைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த பொறுப்புடன் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story