தஞ்சை கீழவாசல் ரகுமான்நகரில், குப்பை தரம்பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - பணிகள் பாதியில் நிறுத்தம்; எம்.எல்.ஏ.- அதிகாரிகள் பேச்சுவார்த்தை


தஞ்சை கீழவாசல் ரகுமான்நகரில், குப்பை தரம்பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - பணிகள் பாதியில் நிறுத்தம்; எம்.எல்.ஏ.- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 24 Jun 2020 11:08 AM IST (Updated: 24 Jun 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கீழவாசல் ரகுமான் நகரில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. எம்.எல்.ஏ., அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.904 கோடி செலவில் பஸ் நிலையம், மார்க்கெட், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கை சரி செய்து அதற்கு பதிலாக 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு இடத்திலும் தலா ரூ.75 லட்சம் செலவில் இந்த குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக குடியிருப்பு பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் மாநகராட்சி இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம். ரகுமான் நகரிலும் குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்கா பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பொக்லின் எந்திரம் வரவழைக்கபட்டு தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து, பொக்லின் எந்திரத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் பொதுமக்கள் அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜகுமாரன், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், சித்ரா மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தஞ்சை தாசில்தார் வெங்கடேசனும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதற்கு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க கூடாது. இந்த பகுதியில் 1000 வீடுகள் உள்ளன. 4 பள்ளி வாசல்கள், 2 கோவில்கள், 2 பள்ளிகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு மையப்பகுதியில் இது அமைத்தால் சுகாதாரக்கேடு ஏற்படும் என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் உடனுக்குடன் தரம் பிரித்து அகற்றப்படும். இங்கு தேங்கிக்கிடக்காது என தெரிவித்தனர். ஆனால் அதை மக்கள் ஏற்கவில்லை.

இந்த நிலையில் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. நீலமேகம் சம்பவ இடத்திற்கு வந்து அவரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தற்போது பணிகள் நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story