100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை முழுமையாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் - விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்தது


100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை முழுமையாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் - விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 24 Jun 2020 11:08 AM IST (Updated: 24 Jun 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை முழுமையாக வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர், 

கொரோனா நோய் தொற்று பேரிடர் கால நிவாரண நிதி உதவிகளை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரித்து, அனைவருக்கும் முழு அளவில் வேலை கிடைக்க செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள சம்பளம் ரூ.256-ஐ முழுமையாக வழங்க வேண்டும்.

ரேஷன் அட்டை இல்லாத குடும்பங்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ஒன்றியம் மாங்குடியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், கிளை செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் அருண், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெனிமார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கோட்டூர் ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பள்ளிவர்த்தியில் மாவட்ட பொருளாளர் ஜெயராமன், ஆதிச்சபுரத்தில் ஒன்றிய தலைவர் சிவசண்முகம், பாலையூரில் ஒன்றிய பொருளாளர் கணேசன், நொச்சியூரில் ஒன்றிய துணை தலைவர் தேவதாஸ், குறிச்சியில் ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டூரில் ஒன்றிய துணை செயலாளர் வி.கணேசன், திருவெண்டுதுறையில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உஷா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், சங்க நகர தலைவர் வாசுதேவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ராயநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப், ஊராட்சி தலைவர் ரஜினி ஆகியோர் தலைமை தாங்கினர். வரம்பியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், ஊராட்சி கிளை செயலாளர் குமரேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொத்தமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதேபோல 32 ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய தொழிலாளர் சங்க மன்னார்குடி நகரக்குழு சார்பில் கைலாசநாதர் கோவில் லெனின் காலனி மற்றும் முதல் சேத்தி ஜீவா காலனி ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நகர செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் மீனாம்பிகை, விவசாயிகள் சங்க நகர செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியை அடுத்த சவளக்காரனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், ஒன்றிய செயலாளர் பாப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்திராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கோவிந்தன், வீரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான் ஒன்றியம், சாரநத்தம் ஊராட்சியில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராதா முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story