பல்லடம் அருகே வீடு புகுந்து தந்தை-மகளை பீர்பாட்டிலால் தாக்கி 6 பவுன்நகை கொள்ளை
பொங்கலூர் அருகே வீடு புகுந்து தந்தை-மகளை பீர்பாட்டிலால் தாக்கி 6 பவுன்நகையை, முக கவசம்அணிந்து வந்த ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 80). இவருடைய மனைவி பாப்பாத்தி (75). இவர்களுடைய மகள் இந்துராணி (50). இந்துராணியின் மகள் சரண்யா. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு சரண்யா, தனது குழந்தையுடன் வீட்டிற்குள் இருந்தார். வீட்டிற்கு வெளியே உள்ள வராண்டாவில் துரைசாமி, பாப்பாத்தி மற்றும் இந்துராணி ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு முககவசம் அணிந்தவாறு, 30 வயது மதிக்கதக்க 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் திடீரென்று பீர் பாட்டிலால் துரைசாமியை தாக்கினார். பின்னர் இந்துராணியையும் தாக்கி விட்டு, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன்நகையை அந்த ஆசாமிகள் பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த துரைசாமி இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்குதகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைமேற்கொண்டனர். அப்போது கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் வட்டார தமிழில் பேசியதாக தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? அவர்கள் காரில் வந்தார்களா? அல்லது இருசக்கர வாகனத்தில் வந்தார்களா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story