கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை - மின்னல் தாக்கி 5 பேர் பலி
கடலூர், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பலியாகினர்.
ஸ்ரீமுஷ்ணம்,
கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. தினசரி 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கடலூரில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பின்னர் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கியது. இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டது. பின்னர் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.அது பற்றிய விவரம் வருமாறு:-
ஸ்ரீமுஷ்ணம் கொம்பாடி தெருவை சேர்ந்தவர் முருகன், கொத்தனார். இவருடைய மகன் ராம்குமார் (வயது 17). இவர் திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மகன் பிரவீன்குமார்(16). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று விருத்தாசலம் சாலையில் உள்ள அருமைசெட்டிக்குளம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ராம்குமார், பிரவீன்குமார் ஆகியோரும் சென்று இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மாலை 5 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரவீன்குமார், ராம்குமார் ஆகியோரை மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேருடைய உடல்களும் தீப்பற்றி எரிந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், தீயை அணைத்து 2 பேரையும் சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்து வந்த பெற்றோர்கள், 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மின்னல் தாக்கியதில் 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சின்னதுரை(58). தொழிலாளி. இவர் நேற்று மாலை அகரம் கிராமத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. பள்ளிப்பட்டு சுடுகாடு அருகே சின்னதுரை வந்த போது, அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்த துளசி என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகள், அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் செத்தன. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு குடிசை வீடு தீ பற்றி எரிந்ததுடன், பசுமாடும் உடல் கருகி இறந்து போனது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் டி.புதுப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் வேம்பன் மகன் அஜித்குமார்(23). இவர் நேற்று மாலை 6.30 மணிக்கு அதே கிராமத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் சதீஷ்(25). இவர் பள்ளேரிப்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல், செஞ்சி அருகே அன்னியூரை சேர்ந்தவர் தேவி. இவரது குடிசை வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக தேவி அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டதால், உயிர் தப்பினார்கள். கொணலூரில் சடையன் என்பவரது பசுமாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story