தாராவியில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி ஆளும் சிவசேனா பெருமிதம்
தாராவி குடிசை பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து உள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரின் வெற்றி என ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அதிக மக்கள் தொகை, நெரிசலான சுற்றுப்புறம், மிக குறுகிய பாதைகள், பொது கழிவறைகள் ஆகியவற்றின் காரணமாக சமூக விலகல் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாத பகுதி தாராவி என்பதால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது மிகவும் சவாலான பணியாகவே கருதப்பட்டது. இங்கு காட்டுத்தீயாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.அதன்படி இங்கு 18 நாட்களுக்கு ஒருமுறை நோய் பரவல் இரட்டிப்பு ஆனது.
மராட்டிய அரசு மும்பை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு ஆச்சரியமூட்டும் வகையில் பலன் கிடைத்து உள்ளது. தாராவியில் இந்த மாத தொடக்கம் முதல் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து உள்ளது. கொரோனா பரவலின் மையப்பகுதியாக உருவெடுத்து இருந்த தாராவியில் நேற்றுமுன்தினம் வெறும் 5 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் தாராவியில் இதுவே மிக குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.
இது தாராவியில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றி என ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு ஆகும். சிவசேனா கூட்டணி அரசாங்கம் கொரோனா நெருக்கடியை கையாண்ட விதத்தை விமர்சிப்பவர்களும் இந்த கொண்டாட்டத்திற்கு அழைக்கப்படவேண்டும். தாராவியில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான பணிகளை செய்த சிவசேனா தலைமையிலான மாநில அரசும், மும்பை மாநகராட்சியும் மத்திய அரசிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளது.
மே மாதத்தில் தாராவியில் கொரோனா பரவல் விகிதம் 4.3 சதவீதமாக இருந்தது. இது இந்த மாதத்தில் (ஜூன்) 1.02 சதவீதமாக குறைக்கப்பட்டது. தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி நோய் தொற்று கண்டுபிடிப்பு, கண்காணிப்பு, பரிசோதனை, சிகிச்சை ஆகிய 4 அணுகுமுறைகளை தீவிரமாக பின்பற்றியது.
தாராவியில் மொத்தம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 270 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நோய் அறிகுறி உள்ளவர்களாக கண்டறியப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு உள்ளிட்ட கொரோனாவை தடுப்பதற்கான பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை பின்பற்றிய தாராவி மக்களுக்கு நன்றி. இங்கு தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால், மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்.
இருப்பினும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை. மராட்டியத்தின் மற்ற இடங்களில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story