கொரோனா வைரஸ் அதிகரிப்பதால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு? மந்திரிசபை கூட்டத்தில் இன்று முடிவு


கொரோனா வைரஸ் அதிகரிப்பதால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு? மந்திரிசபை கூட்டத்தில் இன்று முடிவு
x
தினத்தந்தி 24 Jun 2020 11:29 PM GMT (Updated: 24 Jun 2020 11:29 PM GMT)

கொரோனா வைரஸ் அதிகரிப்பதால், பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முடிவு செய்யப்பட உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

தலைநகரில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், அரசு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தொழில்கள் முடங்கி கர்நாடக அரசு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஏனென்றால் கர்நாடக அரசுக்கு வரும் வருவாயில் சுமார் 70 சதவீதம் பெங்களூருவில் இருந்து தான் வருகிறது. அதனால் மாநில அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் 20 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.


இதில் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதா? அல்லது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மட்டும் முடக்குவதா? என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

சில மந்திரிகள், பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் சில மந்திரிகள், நகரில் ஊரடங்கை அமல்படுத்தினால், பொருளாதார ரீதியாக அரசுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த மாதிரியான ஊரடங்கை அமல்படுத்துவது என்பது குறித்து அரசு இன்று மந்திரிசபையில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story