நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் - சிறப்பு அதிகாரி உத்தரவு


நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் - சிறப்பு அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 25 Jun 2020 4:00 AM IST (Updated: 25 Jun 2020 7:59 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு அதிகாரியான சுப்ரியா சாகு தலைமையில் குன்னூர் இண்கோசர்வ் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு பேசியபோது கூறியதாவது:-

அனைத்து கிராமங்களிலும் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்களுக்கு கொரோனாவை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களை கொண்டு சமய வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் முகக்கவசம் அணிவது, கை கழுவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். வெளியூரில் இருந்து வருபவர்கள் குறித்து, உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூரில் இருந்து வெளியே செல்பவர்கள் குறித்து கிராம அளவில் உள்ள வருவாய் அலுவலர்கள் கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்து, பராமரிக்க வேண்டும். தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து துறை சார்ந்த குழுக்களை அமைக்க வேண்டும். அந்த குழுக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, கொரோனா விழிப்புணர்வு பயிற்சி அளித்து, அவர்கள் மூலம் தங்களது குழு உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ஆரோக்கிய சேது செயலி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை பதிவிறக்கம் செய்ய பயிற்சி அளிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வயது முதிர்ந்தோர் மற்றும் இணை நோய்களை உடையவர்களுக்கு மாத்திரைகள் வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். தீவிர கண்காணிப்பு, சந்தை பகுதிகளை சீர்படுத்துதல், பஸ் நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தனிநபர் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். காய்ச்சல், மூச்சுத்திணறல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிய மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மருத்துவ குழுக்கள் அமைத்து செயல் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து, அவர்கள் சென்று வந்த இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொற்று பாதித்தவர்களை அனுமதிக்க தேர்வு செய்யப்பட்ட மையங்களை ஆய்வு செய்து, தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டால், அதை சமாளிக்க போதுமான அளவு படுக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story