கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேனி உள்பட 5 நகராட்சிகளில் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு - பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் வாகன நெரிசல்


கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேனி உள்பட 5 நகராட்சிகளில் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு - பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் வாகன நெரிசல்
x
தினத்தந்தி 25 Jun 2020 3:45 AM IST (Updated: 25 Jun 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேனி உள்பட 5 நகராட்சி பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக, கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பெரியகுளம் நகராட்சி பகுதியில் கடந்த வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன.

இதன் தொடர்ச்சியாக தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 5 நகராட்சிகளிலும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவுப்படி நேற்று மாலை 6 மணியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். மக்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு எதிரொலியாக, தேனி உள்பட நகர்பகுதிகளில் நேற்று பகலில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் கடைவீதிகளில் மக்கள் திரண்டனர். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையங்களிலும் மாலை நேரத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மக்கள் சமூக இடைவெளியின்றி பஸ்களில் முண்டியடித்து பயணம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) முதல் மதுரைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மாவட்டத்துக்குள் ஏற்கனவே 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதால், தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை இன்று முதல் பாதியாக குறைக்கப்பட உள்ளது.

அத்தியாவசிய தேவைக்கு வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Next Story