விருதுநகர், சிவகங்கையில் ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலி - புதிதாக 37 பேருக்கு நோய் தொற்று


விருதுநகர், சிவகங்கையில் ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலி - புதிதாக 37 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 25 Jun 2020 3:45 AM IST (Updated: 25 Jun 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் 3 பேரும், சிவகங்கையில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகினர். புதிதாக 37 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16,452 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 349 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி ஆகி உள்ளது. 1,481 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவில்லை. 140 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 245 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி ஆகி உள்ளது. இதில் 18 பேர் விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள். விருதுநகர் இந்திராநகரை சேர்ந்த 64 வயது முதியவர், ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த 75 வயது முதியவர், முத்தால் நகரை சேர்ந்த 34 வயது நபர், மொன்னி தெருவை சேர்ந்த 23 வயது வாலிபர், அல்லம்பட்டி பவுண்டு தெருவை சேர்ந்த 34 வயது பெண், என்.ஜி.ஓ.காலனி சரோஜினி தெருவை சேர்ந்த 51 வயது அரசு அதிகாரி, லட்சுமிநகரை சேர்ந்த 35 வயது நபர், அகமதுநகரை சேர்ந்த 30 வயது பெண், முத்துராமன்பட்டியை சேர்ந்த 31 வயது பெண், அண்ணாமலை தெருவை சேர்ந்த 57 வயது நபர், பெரியபள்ளிவாசலை சேர்ந்த 50 வயது பள்ளிவாசல் இமாம், முத்துராமன்பட்டியை சேர்ந்த 32 வயது பெண், மாவட்ட உயர் அதிகாரி உள்பட 23 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், சாத்தூர், சிவகாசி பகுதியை சேர்ந்த 2 நபரும் என விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் பலியாகினர். ஆதலால் இந்த மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மானாமதுரையில் ஒரு ஆண், பெரியகோட்டையில் 2 பெண்கள், சிவகங்கையில் ஒரு பெண், மானாமதுரையை அடுத்த தே.புதுக்கோட்டையில் ஒரு பெண், தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடியில் ஒரு ஆண், முக்குளத்தில் ஒரு ஆண், மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த ஒரு பெண், மானாமதுரை அருகே லாடனேந்தலை சேர்ந்த ஒரு ஆண், ஆபத்தாரன்பட்டியில் ஒரு ஆண், தெத்தனகாட்டில் 2 ஆண்கள் உள்பட 14 பேருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. திருப்புவனத்தில் வசித்து வந்த டி.புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் சிகிச்சைக்காக கடந்த 20-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Next Story