தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு


தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 25 Jun 2020 4:30 AM IST (Updated: 25 Jun 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசர். இவருடைய மனைவி சகாயராணி. இவர்களுடைய மகள் எஸ்தர்பேபி (வயது 39). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதன்பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எஸ்தர்பேபி தனது கணவரை விட்டு பிரிந்து 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, வீரபாண்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் சகாயராணிக்கும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பாக மாறியது. இது எஸ்தர் பேபிக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது தாயை எஸ்தர் பேபி கண்டித்தார். ஆனாலும் சகாயராணி தனது கள்ளத்தொடர்பை விடவில்லை. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் எஸ்தர் பேபியை காணவில்லை. இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சகாயராணி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்தர் பேபியை தேடி வந்தனர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் சகாயராணியின் தம்பி சேவியர் அருண் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதை அறிந்த எஸ்தர் பேபியின் தந்தை அப்துல் காசர், பள்ளிக்கரணை சென்று, சேவியர் அருண் வீரபாண்டி வந்த பிறகுதான் தனது மகள் காணாமல் போனதாகவும், இதனால் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் மனு கொடுத்தார். இதனையடுத்து வீரபாண்டி போலீசார், சேவியர் அருணை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில் சேவியர் அருண், சகாயராணி மற்றும் பாக்கியராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்து அவர் குடியிருந்த வீட்டிற்கு உள்ளேயே புதைத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து சேவியர் அருண் மற்றும் சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீரபாண்டி அழைத்து வந்து எஸ்தர்பேபியை கொன்று புதைத்த இடத்தை காண்பிக்குமாறு கூறினர். இதையடுத்து எஸ்தர்பேபி புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் காட்டினர். அதன்பின்னர் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், எஸ்தர் பேபி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவருடைய உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய தாமதமானது.

இந்த நிலையில் நேற்று போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் எஸ்தர் பேபி புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. கொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகி விட்டதால் அவருடைய எலும்புகள் மட்டுமே கிடைத்தன. அதை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story