தேன்கனிக்கோட்டை அருகே, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மதுபாட்டில்களை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தர்மபுரி மாவட்டம் கொங்கவேம்பு கிராமத்தை சேர்ந்த அசோகன் (வயது 52) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் ஊழியர்கள் வசூலான பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை மேற்பார்வையாளர் அசோகன் வழக்கம் போல மதுக்கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் வெளிப்புற இரும்பு கதவு மற்றும் ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்பிலான 750 மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மர்மநபர்கள் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு மீண்டும் திரும்பி வந்து விட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடையின் மேற்பார்வையாளர் அசோகன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story