சிறு-குறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சுருக்குமடி-இரட்டைமடி வலை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மீனவ கூட்டமைப்பு வலியுறுத்தல்
சிறு-குறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சுருக்குமடி-இரட்டைமடி வலை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
பொறையாறு,
தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த 20 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1983-ம் ஆண்டு அரசாணைபடி தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட மோட்டார் எந்திரம் பொருத்தப்பட்ட விசைபடகுகளை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் சிறு-குறு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதை கண்டித்து தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதி மீனவர்கள் இணைந்து மீனவ கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் மற்றும் தொழில் மறியலில் ஈடுபடுவது.
தடை செய்யப்பட்ட வலைகள், அதிவேக குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்திய விசைப்படகை பயன்படுத்துபவர்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, கொடியம்பாளையம், பழையாறு, சின்னகொட்டாய்மேடு, கூழையாறு, தொடுவாய், கீழ மூக்கரை, மேலமூக்கரை, சாவடிக்குப்பம், நாயக்கர்குப்பம், மடத்துகுப்பம், புதுக்குப்பம், வானகிரி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story