திருவாரூர் அருகே, குடும்ப தகராறில், தரையில் அடித்த 1½ வயது குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு - கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே தரையில் தூக்கி அடித்ததில் காயம் அடைந்த 1½ வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்,
திருவாரூர் ஒன்றியம் வைப்பூர் அருகே உள்ள திருவாதிரைமங்கலத்தை சேர்ந்தவர் பாரதி மோகன்(வயது 27). இவருடைய மனைவி வேம்பு (23). வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளான இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 1½ வயதில் பாவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் வேம்பு கோபித்து கொண்டு காரைக்கால் மாவட்டம் ஊழியபத்து கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதனையடுத்து உறவினர்கள் சமாதானப்படுத்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தனர். நேற்று முன்தினம் காலை சமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிமோகன் மனைவியை தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த தங்களது 1½ வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதிமோகனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக வைப்பூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மீதான ஆத்திரத்தில் பெற்ற குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story