தர்மபுரியில், அமைச்சர் கே.பி.அன்பழகனின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா


தர்மபுரியில், அமைச்சர் கே.பி.அன்பழகனின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jun 2020 11:36 AM IST (Updated: 25 Jun 2020 11:36 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தர்மபுரி,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் சென்னைக்கு சென்ற அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்தது.

கடந்த 2 நாட்களாக இவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சரின் நேர்முக உதவியாளரான 45 வயதுடைய தனி தாசில்தாருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களில் தர்மபுரியில் அவர் சென்று வந்த கலெக்டர் அலுவலகம், தர்மபுரி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதன்காரணமாக அமைச்சரின் நேர்முக உதவியாளருடன் தொடர்பில் இருந்த வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. ஏ.கோவிந்தசாமி, அரூர் எம்.எல்.ஏ. வி.சம்பத்குமார், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தர்மபுரி மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் தர்மபுரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story