கோவில்பட்டி சிறையில் இறந்த சம்பவம்: வியாபாரி-மகன் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு - மாஜிஸ்திரேட்டு நேரடி விசாரணை
கோவில்பட்டி சிறையில் இறந்த வியாபாரி, அவரது மகன் உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக அவர்களது உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.
சம்பவத்தன்று இரவு அவர்கள் கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த சாத்தான்குளம் போலீசார் ஊரடங்கை மீறி கடையை திறந்ததாக கூறி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 22-ந்தேதி இரவில் சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அன்று இரவு பென்னிக்ஸ் இறந்தார். நேற்று முன்தினம் ஜெயராஜூம் உயிரிழந்தார். இருவரின் உடல்கள் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே, ஜெயராஜ் மனைவி செல்வராணி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், “எனது கணவர், மகன் ஆகியோர் போலீசார் தாக்குதலின் காரணமாக இறந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவர் மற்றும் மகன் உடலை 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, அதை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்“ என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். முடிவில், மனுதாரரின் கணவர் மற்றும் மகன் உடல்களை 3 டாக்டர்களுக்கு குறைவில்லாத டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சாத்தான்குளத்தில் இருந்து ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
கோவில்பட்டி 1-வது கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் காலை 11 மணி அளவில் பிரேத பரிசோதனை நடைபெறும் அறைக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் 2-வது மாடியில் தனது விசாரணையை தொடங்கினார். உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது பிரேத பரிசோதனை அறை முன்பு நின்று கொண்டு இருந்த உறவினர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கூறுகையில், “2 பேரையும் போலீசார் திட்டமிட்டு அடித்து கொலை செய்து விட்டனர். சம்பந்தப்பட்ட போலீசாரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம்“ என்று கூறினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
மாலையில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணையை முடித்தார். பின்னர் இரவில் பிரேத பரிசோதனை நடந்தது. மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர் நடத்திய பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஜெயராஜ் மகள் பெர்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தந்தையும், சகோதரரும் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2 பேரின் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடல்களை பெற்றுக்கொள்ளுமாறு போலீசார் எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இரட்டைக்கொலை வழக்காக பதிவு செய்து இதில் சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த தகவலை எங்களுக்கு தெரிவித்த பிறகுதான் உடல்களை பெற்றுக்கொள்வோம். மேலும், 2 பேரின் மீது நடந்த கொடூர தாக்குதலை கண்டு கொள்ளாமல் விட்ட டாக்டர், மாஜிஸ்திரேட்டு, சிறை அதிகாரி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story