ஒருங்கிணைந்து தடுக்காவிட்டால் கொரோனா பாதிப்பு தினமும் 100 ஆக மாறும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்


ஒருங்கிணைந்து தடுக்காவிட்டால் கொரோனா பாதிப்பு தினமும் 100 ஆக மாறும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Jun 2020 12:50 PM IST (Updated: 25 Jun 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்காவிட்டால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 100 ஆக மாறும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி, 

சமூக வலைத்தளத்தில் கவர்னர் கிரண்பெடி பதிவிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் புதிதாக 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால் ஒரு நாளைக்கு புதிதாக 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

தயவு செய்து அனைவரும் வெளியே செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். கடைக்கு செல்லும் போது சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த 3 முறைகளையும் பின்பற்றும் போது நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது அழுக்குப் படிந்த காலணிகளை உங்கள் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளவும். இந்த முறையை பின்பற்றுவதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களை சமூக இடைவெளியுடன் பணி புரியச் செய்வது, கிருமி நாசினிகளை போதுமான அளவு வைத்திருப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க கட்டாயம் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளுடன் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story