திருக்கனூர் பகுதியில் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே கிராமத்தில் 37 பேருக்கு தொற்று பாதிப்பு


திருக்கனூர் பகுதியில் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே கிராமத்தில் 37 பேருக்கு தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2020 12:50 PM IST (Updated: 25 Jun 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஒரே கிராமத்தில் 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருக்கனூர்,

புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் முக கவசம் தயாரிக்கும் கம்பெனியில் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம், கொடாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வேலை செய்தனர். இதில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் மேலும் பலருக்கு கொரோனா பரவியது.

கடந்த வாரம் வரை கூனிச்சம்பட்டில் 13 பேர், கூனிச்சம்பட்டு காலனியில் 3 பேர், மண்ணாடிப்பட்டு காலனியில் 3 பேர், செல்லிப்பட்டில் 2 பேர், திருக்கனூர் புதுநகர், திருக்கனூர் காலனி, கைக்கிலப்பட்டு, சோரப்பட்டு, காட்டேரிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் மூலம் மேலும் பலருக்கு தொற்று பரவியதால் திருக்கனூர் சுற்றுப்பகுதியில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் வரை 43 பேர் பாதிக்கப்பட்டனர்.

நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 12 பேர் கூனிச்சம்பட்டு கிராமம் மற்றும் காலனியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த கிராமத்தில் இதுவரை 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருக்கனூர் சுற்றுப்பகுதியில் இதுவரை மொத்தம் 57 பேர் தொற்றால் பாதித்துள்ளனர்.

கூனிச்சம்பட்டு கிராமம் மற்றும் காலனியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் நேரில் பார்வையிட்டார். சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறி உள்ளதா? என்று கணக்கெடுத்து வருகின்றனர்.

திருக்கனூர் சுற்று வட்டார கிராமங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story