ராமநகரில் கொரோனா பரவல் அதிகரிப்பு: 3 தாலுகாக்களில் ஊரடங்கு அமல் - அனைத்து கடைகளும் மூடல்; மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்


ராமநகரில் கொரோனா பரவல் அதிகரிப்பு: 3 தாலுகாக்களில் ஊரடங்கு அமல் - அனைத்து கடைகளும் மூடல்; மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
x
தினத்தந்தி 25 Jun 2020 4:13 PM IST (Updated: 25 Jun 2020 4:13 PM IST)
t-max-icont-min-icon

ராமநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 3 தாலுகாக்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டதுடன், மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

பெங்களூரு,

ஊரடங்கின் போது ராமநகர் மாவட்டம், கொரோனா பாதிப்பு இல்லாமல் பசுமை மண்டலாக இருந்தது. ஆனால் சமீப நாட்களாக ராமநகரில் கொரோனா பரவுவது வேகம் எடுத்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் நேற்று முன்தினம் வரை 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக ராமநகர், கனகபுரா, மாகடி ஆகிய 3 தாலுகாக்களில் கொரோனா பரவுவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக ராமநகர் மாவட்ட மக்களிடையே கொரோனா பீதி ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவுவதை தடுக்க கனகபுரா, மாகடியில் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர். மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்க தொடங்கினார்கள். மக்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட நிர்வாகமும் கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த முன்வந்தது.

ஊரடங்கு அமல்

அதைத்தொடர்ந்து, ராமநகர் மாவட்டத்தில் உள்ள ராமநகர், மாகடி, கனகபுரா ஆகிய 3 தாலுகாக்களில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தினமும் காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று 3 தாலுகாக்களில் வியாபாரிகள் 4 மணிநேரம் மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.

சில கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அடைத்திருந்தனர். கொரோனா பீதி காரணமாக கனகபுரா, மாகடி தாலுகாக்களில் மக்கள் வெளியே நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள். மக்களின் முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story