சிறையில் தந்தை, மகன் பலி: சாத்தான்குளம் போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும்-தட்சணமாற நாடார் சங்கம் வலியுறுத்தல்
சாத்தான்குளம் போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தட்சணமாற நாடார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நெல்லை,
நெல்லை தட்சணமாற நாடார் சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் சண்முகவேல் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் நாடார், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணத்துக்கு காரணமான சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீசார், போலீஸ் நண்பர்கள் ஆகியோரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த இன்ஸ்பெக்டரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான கைதிகளை கோவில்பட்டி கிளை சிறையில் அடைப்பதில் மர்மம் உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜெயராஜ் குடும்பத்தில் ஆண் வாரிசே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், நிவாரணத்தொகை போதாது. அவர்களுக்கு ரூ.2 கோடி வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2 பேர் மரணம் குறித்து வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனவே அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விலை உயர்ந்த செல்போனை கேட்டு கொடுக்காததால் இந்த கொலையில் ஈடுபட்டு உள்ளனர். 2 சப்-இன்ஸ்பெக்டர்களும் பங்களாக்கள், தோட்டங்கள் வாங்கி குவித்து உள்ளனர். எனவே போலீஸ் அதிகாரிகளின் சொத்து குவிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இந்த பிரச்சினை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிற மதுரை ஐகோர்ட்டுக்கும், நிவாரண நிதி அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்.எல்.ஏ., கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது, தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் வி.எஸ்.கணேசன் நாடார், இயக்குனர் தங்கவேலு நாடார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தட்சணமாற நாடார் சங்க நிர்வாகிகள் சாத்தான்குளம் சென்று, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story