மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று உதவித்தொகை வழங்க ஏற்பாடு -கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று உதவித்தொகை வழங்க ஏற்பாடு -கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2020 5:00 AM IST (Updated: 26 Jun 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவியை அவர்களின் வீட்டிலேயே வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வினியோகப்படிவம் பூர்த்தி செய்ய தேவையான தனிநபர் சம்பந்தப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

தொடர்ந்து அவர்கள் தங்களது அசல் தேசிய அடையாள அட்டையை காண்பித்தும், அதன் நகலை நிவாரணத் தொகை வழங்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தும், ரூ.1,000 நிவாரணத்தொகையை பெற்று கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நிவாரண உதவித்தொகை இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரையிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பயனாளிகளின் இருப்பிடத்துக்கே நேரில் சென்று வழங்கப்படும்.

எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் நிவாரணத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story