இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மீது வழக்கு- காய்கறி வாங்க காரில் சென்றார்


இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மீது வழக்கு- காய்கறி வாங்க காரில் சென்றார்
x
தினத்தந்தி 26 Jun 2020 2:30 AM IST (Updated: 26 Jun 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வாகனங்களில் செல்ல கூடாது.

சென்னை, 

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வாகனங்களில் செல்ல கூடாது. நடந்து தான் செல்ல வேண்டும் என்பது போலீசார் உத்தரவு ஆகும். இதனை மீறுவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் திருவான்மியூர் போலீசாரின் வாகன சோதனையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் சிக்கினார். அவரது வீடு சாஸ்திரி நகரில் இருக்கிறது. அவர் காய்கறிகள் வாங்குவதற்கு திருவான்மியூருக்கு வந்த போது அவரது காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

அப்போது அவர் தனது பெயர் ராபின் சிங் என்று மட்டும் கூறியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பின்னர் அவர் தன்னுடைய செல்போனை எண்ணை வழங்கிவிட்டு, நடந்தபடி தனது வீட்டுக்கு திரும்பினார். இந்த நடவடிக்கையின் போது அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் என்பது போலீசாருக்கு தெரியவில்லை. அவர் வீட்டுக்கு சென்ற பின்னரே போலீசாருக்கு தெரிய வந்தது.

Next Story